×

பஞ்சாப் சட்டப் பேரவை தேர்தலில் கேப்டன் தலைமையை ஏற்க மாட்டேன்! சித்து ஆதரவு எம்எல்ஏ திடீர் போர்க்கொடி

சண்டிகர்: பஞ்சாப் சட்டப் பேரவை தேர்தலின் போது கேப்டன் அமரீந்தர் சிங் தலைமையில் தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்று மாநில தலைவர் சித்துவின் ஆதரவு எம்எல்ஏ பரபரப்பாக பேசியுள்ளார். பஞ்சாப்பில் முதல்வர் அமரீந்தர் சிங்குக்கும், மாநில காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சித்துவிற்கும் இடையே மோதல்கள் நீடிக்கின்றன. அடுத்தாண்டு தொடக்கத்தில் பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இருதரப்பு ஆதரவாளர்கள் மத்தியில் அவ்வப்போது மோதல்கள் ஏற்பட்டு வருவது வாடிக்கையாகி வருகிறது. இந்நிலையில், சித்துவின் ஆதரவு எம்எல்ஏ சுர்ஜித் திமான் என்பவர், முதல்வர் அமரீந்தர் சிங்குக்கு எதிராக குரல் எழுப்பி உள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில், ‘அடுத்தாண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் கேப்டன் அமரீந்தர் சிங்கின் தலைமையில் போட்டியிட மாட்டேன். மாநில காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவை முதல்வர் வேட்பாளராக அறிவித்தால் மட்டுமே தேர்தலில் போட்டியிடுவேன்’ என்று கூறியுள்ளார். இவரது பேச்சு, காங்கிரஸ் தலைவர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அமரீந்தர் சிங்கை முதல்வர் பதவியில் இருந்து நீக்குவதை வலியுறுத்தும் வகையில், சித்துவின் ஆதரவு எம்எல்ஏவின் பேச்சுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து, டேராடூனில் பஞ்சாப் பொறுப்பாளர் ஹரீஷ் ராவத் கூறுகையில், ‘கேப்டனுக்கும் சித்துவுக்கும் இடையிலான சண்டையானது, மாநில காங்கிரஸ் கட்சிக்குள் பிளவை ஏற்படுத்தும்’ என்றார். முன்னதாக சித்து முதல்வர் அமரீந்தருக்கு எழுதிய கடிதத்தில், ‘பஞ்சாபில் புதிய வேளாண் சட்டத்தை செயல்படுத்த கூடாது. விவசாயிகள் போராட்டத்தின் போது சில விவசாயிகள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதை ரத்து செய்ய வேண்டும். விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க பருப்பு வகைகள் மற்றும் எண்ணெய் வித்துக்களை அரசு நிறுவனங்கள் மூலம் கொள்முதல் செய்து குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு (எம்எஸ்பி) விற்க வேண்டும்’ என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. …

The post பஞ்சாப் சட்டப் பேரவை தேர்தலில் கேப்டன் தலைமையை ஏற்க மாட்டேன்! சித்து ஆதரவு எம்எல்ஏ திடீர் போர்க்கொடி appeared first on Dinakaran.

Tags : Punjab Legislative Assembly ,Sidhu ,MLA ,Chandigarh ,Punjab Law Assembly ,Amarinder Singh ,Punjab Law council ,MLA Sudde ,
× RELATED இன்வெஸ்டிகேஷன் திரில்லர் கதையில் ஜி.வி.பிரகாஷ் குமார்